வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அரசை எதிர்த்து போராட்டம் வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள்

தினமணி செய்தி: தமிழக அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் அல்லது வேலையில்லா கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை மாற்றுத்

திறனாளிகள் போராட்டம் நடத்தவிருப்பதாக அவர்களுக்கான ஒரு சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு சமுகப் பாதுகாப்பு அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்க தனி நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனுடையோர் உயர் கல்வி பயில கட்டணங்கள் விதிவிலக்கு, மாணவர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுச் செலவாக மாதம் ரூ.450 வழங்கப்படும். மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு வருவாய் உச்சவரம்பின்றி ரூ.500 வீதம் மாதாந்திர உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது.

கை, கால் ஊனமுற்றோர் பயணச் சலுகைகளுடன், நாட்டிலேயே முதல் முறையாக மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆயிரத்து 500 பேருக்கு இலவசமாக மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளது. கடும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் கை, கால் தசை இறுக்கமாக இருக்கும். இவர்களது தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் 500 பேருக்கு முதல் கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செலவைப் பார்க்க வேண்டியிருக்கிறது: என்னைப் பொருத்தவரையில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்ல, யாருமே எந்தவிதமான சிரமமும் இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பது தான். அதற்காகத்தான் இந்த வயதிலும் இரவு பகலாக உழைக்கிறேன். சிந்திக்கிறேன்.

யாருக்கு என்ன செய்தால் அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால், ஒரு அரசு இருக்கும் போது, அந்த அரசினால் எந்த அளவுக்கு செலவழிக்க முடியும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அரசிடம் இருக்கின்ற நிதியைக் கொண்டு அனைத்துத் தரப்பினரையும் முடிந்த அளவுக்கு திருப்தி செய்ய வேண்டுமென்பதே என் எண்ணம்.

தேர்தல் வரப்போகிறது: சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரப் போகிறது என்றதுடன், அதற்குள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் எண்ணுகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைதான் போராட்டம் என்பதெல்லாம்.

உண்மையில் அவர்களுக்கு இந்த அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டுமென்பது நோக்கமல்ல. அதேநேரத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் தங்கள் சங்கங்களை வளர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அப்பாவிகளைத் தூண்டிவிட்டு குளிர்காய எண்ணுகிறார்கள்.

அதுவும் அந்த அலுவலர்களுக்குத் தெரிகிறது என்ற போதிலும் தங்களையும் அறியாமல் ஆளாகிவிட நேரிடுகிறது என்பதை நான் நன்கறிவேன்.

ஒத்துழைக்க முன்வாருங்கள்: இந்த ஆட்சி மாறிவிடும், பிறகு உங்கள் தேவைகள் எதுவும் நிறைவேறாது என்றெல்லாம் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நிச்சயமாக ஆட்சி மாறாது. ஏன் மாறப் போகிறது?

இந்த ஆட்சியிலே உங்கள் தேவைகள் கவனிக்கப்படவில்லையா? எந்தத் தரப்பினராவது புறக்கணிக்கப்பட்டதுண்டா? ஊழல்கள் நடைபெற்றது உண்டா? இந்த அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை நீங்கள் அறிய மாட்டீர்களா? அந்தச் சலுகைகளையெல்லாம் நீங்கள் பெறுகிறீர்களா இல்லையா?

ஆட்சி மாறி விடும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமலே போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. எனவே, இந்த அரசை எதிர்த்துப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட்டு, அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்து கந்தசாமி: யாரும் எதுத்து போராட வேண்டாம்னா எப்படி. இந்த போராட்ட வழியெல்லாம் நீங்களும், உங்க கட்சியான திமுகவும் சொல்லிக் கொடுத்ததுதானே.

மறக்காம வோட்டுப் போடுங்க

2 கருத்துகள்:

ஆதித்த கரிகாலன் சொன்னது…

நாங்க பன்னுவோம் போராட்டம், அது எங்க கொள்கைகள்ல ஒன்னு, நீங்க தான் பண்ணக்கூடாது, ஹீ... ஹீ..

Unknown சொன்னது…

ஆதித்த கரிகாலன், தங்கள் வருகைக்கு நன்றி

கருத்துரையிடுக