வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஜார்க்கண்டில் சிபு சோரன் ஆதரவுடன் பா.ஜ. ஆட்சி: அத்வானி அதிருப்தி

வெப்துனியா.காம் செய்தி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியமைக்க உள்ளது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அத்வானி போன்றே அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜேஎம்எம் உடனான கூட்டணி நிலையில் உறுதியாக உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக அர்ஜூன் முண்டா நாளை பதவியேற்க உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் அத்வானி கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் கொண்டுவந்த வெட்டுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஜேஎம்எம் தலைவர் சிபு சோரன் கட்சிமாறி வாக்களித்ததால், ஜார்க்கண்டில் அவரது கட்சித் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா திரும்ப பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது.

அதன் பின்னர் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை திரட்ட எந்த கட்சிக்கும் முடியாமல் போனதால், சட்டசபை முடக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

இந்நிலையில் ஜேஎம்எம் மற்றும் ஏஜேஎஸ்யு ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைப்பது என்று பா.ஜனதா முடிவு செய்தது.

இதனையடுத்து உள்ள பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற தலைவராக, கடந்த 7 ஆம் தேதியன்று, முன்னாள் முதலமைச்சர் அர்ஜூன் முண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பா.ஜனதா - ஜேஎம்எம் கூட்டணித் தலைவர்கள், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதோடு, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் ஆட்சியமைக்க வருமாறு அர்ஜூன் முண்டாவுக்கு ஆளுநர் பரூக் நேற்று அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து கந்தசாமி: சான்ஸ் கிடைச்சுதுன்னு ஆட்சியை அமைப்பீங்களா, காங்கிரஸோட புத்திசாலித்தனம் எல்லாம் உங்களுக்கு வராது போலிருக்கே.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக